×

மகாராஷ்டிராவில் அடுத்த ரவுண்டு அரசியல்; முதல்வர் ஷிண்டேவின் பதவி பறிபோகிறதா?.. காங். தலைவரின் கருத்தால் சலசலப்பு

மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் பதவி பறிபோகும் என்பதால், அடுத்ததாக அஜித் பவார் முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கூறிய கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் விலகிய அஜித் பவார், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா – பாஜக கூட்டணியில் இணைந்தார். தொடர்ந்து துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவியேற்றுக் கொண்டார். அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 8 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்று கொண்டனர். இதனையடுத்து அனைவரையும் கட்சியை விட்டு நீக்குவதாக சரத்பவார் அறிவித்திருந்தார்.

தங்களுக்கு தான் அதிக எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு அஜித் பவார் உரிமையும் கோரி உள்ளார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பிரித்விராஜ் சவான் அளித்த பேட்டியில், ‘தற்போது மகராஷ்டிரா துணை முதல்வராக உள்ள அஜித்பவார், ஆகஸ்ட் 10ம் தேதி மகராஷ்டிர மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள் 15 பேரும், ஆகஸ்ட் 10ம் தேதி தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது. அதன்பிறகு ஏக்நாத் ஷிண்டே முதல்வர் பதவியிலிருந்து விலகிவிடுவார். தொடர்ந்து அஜித் பவார் முதல்வராக பதவியேற்பார்’ என்றார்.

இவரது கருத்து, மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் புயலை கிளப்பி உள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், ‘மகா கூட்டணியின் தலைவர் என்ற முறையில் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவரான அஜித் பவார் முதல்வராக பதவியேற்க மாட்டார். ஏக்நாத் ஷிண்டே தொடர்ந்து முதல்வராக நீடிப்பார்’ என்று கூறினார்.

The post மகாராஷ்டிராவில் அடுத்த ரவுண்டு அரசியல்; முதல்வர் ஷிண்டேவின் பதவி பறிபோகிறதா?.. காங். தலைவரின் கருத்தால் சலசலப்பு appeared first on Dinakaran.

Tags : Maharashtra ,CM ,Shinde ,Mumbai ,Chief Minister ,Egnath Shinde ,Ajit Bawar ,
× RELATED காங்கிரசில் சேர்ந்து சாவதை விட...